கூட்டணிக்காக இந்திக்கு அடிமையாகி விட்டதாக திமுக…? INDI கூட்டணி கூட்டத்தில் இந்திக்கு சாமரம் வீசிய திமுக ; பாஜக கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 1:34 pm
Quick Share

தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கட்சியினரின் கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும், மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த “INDI கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது, திமுக எம்பி டிஆர் பாலு, நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசுவதை மொழிபெயர்த்து சொல்ல வேண்டும், என்று வலியுறுத்தினார். இதையடுத்து, ஜேடியூ கட்சி நிர்வாகி மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டிருந்தார்.

ஆனால் நிதிஷ்குமார் கடும் கோபத்துடன், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும், ஆகையால் திமுக தலைவர்கள் இந்தி மொழியை கற்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது பேச்சை ஆங்கிலத்தை மொழி பெயர்ப்பதை உடனே நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது. இது ‘INDI’ கூட்டணி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்திக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் திமுக, தனது “INDI” கூட்டணியில் இந்திக்கு எதிராக பேசாமல், நிதிஷ்குமாரின் பேச்சால் அடங்கி போயிருப்பது கடும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் அவர்கள். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது திமுக. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும், மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது ஏன்?

தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக ? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா திமுக? உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் திமுகவிற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லை,” எனக் கூறினார்.

Views: - 279

0

0