டெல்லி விவசாயிகள் போராட்டம்: போலி செய்தி சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு..!!

4 February 2021, 9:19 am
media - updatenews360
Quick Share

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி போலீசார் 4 எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்றனர்.


இந்த சம்பவத்தில், போலீசாரின் அனுமதியை மீறி அவர்கள் வேறு தடத்திலும் வேறு நேரத்திலும் டிராக்டர்களை கொண்டு முட்டி, மோதி தடுப்புகளை உடைத்து முன்னேறி செங்கோட்டையை அடைந்தனர். அதன்பின் மத கொடி ஒன்றை செங்கோட்டையில் ஏற்றினர். இந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற 80க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக போலீஸ் துறையில் உயர்மட்ட அளவில் அதிகாரிகளாக பணிபுரிவோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. 200க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்தனர் என்ற போலி செய்தியை, பழைய வீடியோவை கொண்டு பதிவிட்ட ராஜஸ்தானின் சுரு நகரை சேர்ந்த ஓம் பிரகாஷ் தேத்தர்வால் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கிசான் அந்தோலன் ராஜஸ்தான் என்ற பெயரில் முகநூல் கணக்கு ஒன்றை ஓம் பிரகாஷ் தொடங்கியுள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் எடுத்த மற்றொரு மாநிலத்தின் காவல் அதிகாரிகளின் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவை, டெல்லி விவசாயிகள் போராட்டத்துடன் இணைத்து டெல்லி போலீசார் அதற்கு எதிர்வினையாற்றியது போல் சித்தரித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜஸ்தானின் பரத்பூரை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி போலீசுக்கு உட்பட்ட சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் பிரிவு விசாரணை மேற்கொண்டது. இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி போலீசார் 4 எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கும்படி கூறப்பட்டு உள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினர். இதுபற்றிய கூட்டு விசாரணைக்காக 4 நபர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சர்ச்சைக்குரிய, போலியான, தூண்டி விடும் வகையிலான பதிவுகளை வெளியிட்ட கணக்குகள் மற்றும் அந்நபர்களை, தொடர்புடைய சமூக ஊடகங்களில் இருந்து நீக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.

Views: - 0

0

0