டெல்லி சிஏஏ கலவரம்..! வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்..? குற்றப்பத்திரிகையில் தகவல்..!

24 September 2020, 1:16 pm
anti_caa_protest_delhi_updatenews360
Quick Share

டெல்லி சிஏஏ கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், உதித் ராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் ஆகியோர் மீது டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்த சிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை விரிவுபடுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் குடியுரிமைச் சட்டத்தை திருத்தியது.

இதையடுத்து, குடியுரிமைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
டெல்லியில் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை அடுத்து உச்சகட்டமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 50’க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பொது சொத்துக்களும் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டது.

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, முன்னதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூசைன் உட்பட பலரைக் கைது செய்தது.

இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையில், டெல்லி காவல்துறை முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹானையும், வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சியையும் குறிப்பிட்டுள்ளதுடன், அவர்கள் வெளிப்படுத்திய அறிக்கைகளில் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பேச்சுகள் பற்றி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் 17,000 பக்க குற்றப்பத்திரிகையில் ஒரு சாட்சியின் அறிக்கை, “உமர் காலித், சல்மான் குர்ஷித், நதீம் கான் என அவர்கள் அனைவரும் ஆத்திரமூட்டும் உரைகளை வழங்கினர் மற்றும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக மக்கள் அணிதிரட்டப்பட்டனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக உதித் ராஜ், சல்மான், குர்ஷித், பிருந்தா காரத், உமர் காலித் ஆகியோரின் ஆத்திரமூட்டும் உரைகள் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டன.” என சாட்சி குற்றம் சாட்டினார்.

அமைதியாக நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் வன்முறையாக மாற, சிலரின் ஆத்திரமூட்டும் உரைகள் காரணமாக இருந்தது அனைவரும் அறிந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் உரைகளும்  வன்முறையைத் தூண்ட பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.