சர்ச்சையை உருவாக்காதீங்க.. சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்க : அக்பர், சீதா வழக்கில் உயர்நீதிமன்றம் அட்வைஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2024, 7:21 pm
Akbar sita
Quick Share

சர்ச்சையை உருவாக்காதீங்க.. சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்க : அக்பர், சீதா வழக்கில் உயர்நீதிமன்றம் அட்வைஸ்!!

மேற்கு வங்க மாநிலத்தின் உயிரியல் பூங்காவில் உள்ள அக்பர் மற்றும் சீதா பெயர்களை கொண்ட சிங்கங்களின் பெயர்களை மாற்றுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டது.

ஆனால், சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், “அக்பர் என்பவர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா என்பவர் ராமாயணத்தின் கதாபாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக வழிபடப்படுகிறார். எனவே, இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.” என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கானது கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “பாசத்தின் அடிப்படையில் சிங்கங்களுக்கு இப்படி பெயர் சூட்டலாம். அதனை எப்படி அவதூறு என நினைக்கலாம். இது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து மாறுபடும். சிங்கத்துக்கு சீதா என பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, “இன்று சிங்கத்துக்கு இப்படி பெயர் வைத்தவர்கள் நாளை கழுதைக்கு ஏதாவது தெய்வத்தின் பெயரை வைக்கலாம். இதனை தடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சீதாவை வணங்குகிறோம். அவர் கோவிலில் தான் இருக்க வேண்டும். காட்டில் அல்ல.” என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்த போது பேசிய நீதிபதி பட்டாச்சாரியா, ”சீதா மற்றும் அக்பரின் பெயரை சிங்கங்களுக்கு சூட்டி ஏன் சர்ச்சையை உருவாக்குகிறீர்கள்? இந்தப் பெயரை வைத்தவர் யார்? கடவுளின் பெயர், புராண கதாபாத்திரத்தின் பெயர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர் போன்றவற்றை மிருகத்துக்கு வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஒரு பொதுநல அரசு மற்றும் மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கு வங்க அரசு சிங்கங்களின் பெயரை மாற்றவேண்டும்” என உத்தரவிட்டார்.

Views: - 225

0

0