ஆடு என நினைத்து ஆளை வெட்டிய போதை ஆசாமி : பலி கொடுக்கும் நிகழ்ச்சியில் பரிதாப நிகழ்வு!!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2022, 11:00 am
ஆந்திரா : குடிபோதையில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை வெட்டிய ஆசாமியால் பரிதாபமாக ஒருவர் பலியானார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஊர் எல்லையில் உள்ள கிராம தேவதைக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் ஃபுல் போதையில் மது அருந்தி தள்ளாடி நின்று கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது போதையில் இருந்த சலபதி ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார்.
இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சுரேசை மீட்டு மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மதனபள்ளி போலீசார் ஆடு என்று நினைத்து சுரேஷ் தலையை வெட்டிய சலபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடு என நினைத்து மதுபோதையில் ஆளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0