அமைச்சரை தொடர்ந்து ஆளுங்கட்சி எம்பியும் கைது ; அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த கைது சம்பவத்தால் அதிர்ச்சியில் முதலமைச்சர்!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 8:59 pm
Quick Share

முறைகேடு வழக்கில் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்பி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்தார். அதன்படி, மதுபாட்டில்களின் சில்லறை விற்பனையை தனியாரிடம் வழங்குவதுதான். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என மாநில அரசு கூறியது.

இந்த புதிய கொள்கையை அமல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. டெல்லி தலைமை செயலரின் பரிந்துரையின் பேரில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கெ. சக்ஸேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் சிபிஐயுடன் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணையை தொடங்கியது. அதில், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா கைதாகி, சிறையில் உள்ளார்.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன், இணைக்கப்பட்ட பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை அறிந்து, அவரது வீட்டு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன்,
சஞ்சய் சிங் அமலாக்க இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆளும்கட்சியின் எம்பியும் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 282

0

0