ஒரு நாள் முதல்வர்..! சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சாத்தியமே என நிரூபித்த இளம் பெண்..!

24 January 2021, 10:57 am
Srishti_Goswami_UpdateNews360
Quick Share

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி, பாஜக ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக இன்று செயல்பட உள்ளார். அவர் டேராடூனில் நடைபெறும் குழந்தை சட்டசபை அமர்வில் பங்கேற்பார்.

இந்தியாவின் பல பகுதிகளில், சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், எஸ்பி போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கௌரவிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால் ஒரு நாள் முதல்வராக யாரும் இதுவரை இருந்ததில்லை. 

இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று, உத்தரகண்டில் இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஹரித்வார் மாவட்டத்தின் தவுலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ஷிருஷ்டி கோஸ்வாமி பி.எஸ்.சி விவசாயம் படித்து வருகிறார். அவரது தந்தை கிராமத்தில் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். அவரது தாயார் அங்கன்வாடி தொழிலாளி. 19 வயதான அவர் 2018’இல் உத்தரகண்ட் சிறுவர்கள் சட்டசபையின் முதல்வராக இருந்தார்.

மேலும் 2019’ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க  ஷிருஷ்டி கோஸ்வாமி  தாய்லாந்து சென்றார்.

“ ஷிருஷ்டி கோஸ்வாமி ஒரு புத்திசாலி குழந்தை. எல்லா இடங்களிலும் பெண் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் பணியாற்ற விரும்புகிறார். அவர் ஒரு தொண்டு நிறுவனத்தில் பங்கு பெற்று, சிறுமிகளை கல்வி பெற ஊக்குவித்து வருகிறார்.” என்று அவரது தந்தை பிரவீன் பூரி கூறினார்.

இந்நிலையில் ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு பெற்றுள்ள ஷிருஷ்டி கோஸ்வாமி, மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்செயினில் இருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளார். மேலும் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் மற்றும் பிற மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களை அவர் மறுஆய்வு செய்ய உள்ளார்.

ஷிருஷ்டி கோஸ்வாமிக்கு மாநில அரசின் அதிகாரிகள் விரிவான விளக்கக்காட்சியை வழங்குவார்கள்.

இந்நிலையில், ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்பு குறித்து பேசிய ஷிருஷ்டி கோஸ்வாமி, தான் ஆச்சரியத்தில் உறைந்து போனதாகவும், மக்கள் நலனுக்காக உழைக்கும் இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் கூறினார்.

ஷிருஷ்டி கோஸ்வாமி முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் பல்வேறு துறைகள் குறித்த விரிவான விளக்கத்தை அதிகாரிகள் வழங்குவார்கள். இது தொடர்பாக உத்தரகண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் மலை மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

“இது தொடர்பான ஏற்பாடுகள் ஏற்கனவே கெய்செயினில் உள்ள மாநில சட்டசபை கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளன.  ஷிருஷ்டி கோஸ்வாமி இப்போது எங்களுடன் பணியாற்றி வருகிறார். அவரின் திறன்களை நாங்கள் நன்கு அறிவோம்.” என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0