மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா..! குடியரசுத் தலைவர் ஏற்பு..! என்ன காரணம்..?

18 September 2020, 10:29 am
harsimrat_kaur_badal_updatenews360
Quick Share

ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா குறித்து பதிலளித்த பாரதீய ஜனதா கட்சி, பஞ்சாபின் உள்ளூர் அரசியலின் அழுத்தத்தின் காரணமாகத்தான் ராஜினாமா செய்ததாகக் கூறியுள்ளது.

இருப்பினும், ஷிரோமணி அகாலிதளத்துடன் (எஸ்ஏடி) கலந்துரையாடிய பின்னர் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று பாஜக இன்னும் நம்புகிறது.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவசாய சீர்திருத்தங்கள் :

பிரதமர் மோடி கடந்த 2014’இல் முதல்முறையாக பதவியேற்ற போது நாடு 75’வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022’ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் தற்போது மூன்று முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர பாராளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது.

இதில் முதல் மசோதா அத்தியாவசிய பொருட்கள் சட்டத்துடன் தொடர்புடையது. இரண்டாவதாக பண்ணை உற்பத்தி மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) குறித்தது. இது அனைவருக்கும் விவசாய பொருட்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது.

மூன்றாவது மசோதா விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் தொடர்பான உழவர் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தத்தில் உள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தை சட்டப்பூர்வமாக்குகிறது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு அல்லாமல் முதலாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் என்று எதிர்க்கட்சி கூறியது.  

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு :
இந்த மூன்று மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப்பில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள ஷிரோமணி அகாலிதளத்திற்கும் இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாக மத்திய அமைச்சரவையில் இருந்து ஷிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுல் பாதல் ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவரின் ராஜினாமாவை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், “நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும். ஆனால் காங்கிரஸ் பஞ்சாபில் பொய்களை பரப்பிய விதத்தால், ஷிரோமணி அகாலிதளமும் உள்ளூர் அழுத்தத்தின் கீழ் வந்துள்ளது. அதனால்தான் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார். மசோதாக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் ஷிரோமணி அகாலிதளம் அறிந்திருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

மசோதாக்கள் குறித்து பரப்பப்படும் பொய்களை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம் என்று அகர்வால் கூறினார். காங்கிரஸ் போன்ற கட்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மூன்று மசோதாக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் கைவிடப்பட்டதாக பொய் சொல்கின்றன. எம்.எஸ்.பி மட்டுமல்ல, ஏ.பி.எம்.சியும் அகற்றப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது பொய்களை பரப்பியதைப் போல விவசாய சீர்திருத்தங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றன என்றும், இந்த மூன்று மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே பஞ்சாப் அரசியலில் ஷிரோமணி அகாலி தளத்தை கழட்டி விட்டு தனியாக அரசியல் செய்வதில் பாஜக முனைப்பு காட்டுவதாகவும் அதனால் தான் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்ய முன்வந்ததும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசபப்டுகிறது.

Views: - 0 View

0

0