இனி வீட்டிலிருந்தே வருமான வரித் தாக்கல் செய்யலாம்..! சோதனை அடிப்படையில் செயல்படுத்தும் மத்திய அரசு..!

4 August 2020, 10:33 am
IT_Department_UpdateNews360
Quick Share

வருமான வரி செலுத்தும் முறையை எளிமையாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, தற்போது வீட்டிலிருந்தே வருமான வரி செலுத்தும் வகையில் புதிய நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழகம், புதுச்சேரிக்கான முதன்மை தலைமை வருமானவரித் துறை ஆணையர் எம்.எல்.கார்மாகர் மற்றும் வருமானவரி முதன்மை ஆணையர் ஜஹான் ஷேப் அக்தர் ஆகியோர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது பின் வருமாறு :

நாடு முழுவதும் வருமான வரித் தாக்கலை எளிதாக்கவும்,  பிழையின்றி மேற்கொள்ளவும் மத்திய அரசு ஒரு புதிய முன்னோடி திட்டத்தை சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு மண்டலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு, பிழைகள் சரிசெய்யப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் வாரந்தோறும் ஐந்தாயிரம் வருமான ரிக் கணக்குகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட 8,569 வருமான வரித் தாக்களில் 1900 கணக்குகள் புதிய நடைமுறை மூலம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலும் வருமானவரித் தாக்கல் செய்பவரின் கணக்கை, வேறு மண்டலங்களில் உள்ள வருமான வரி அலுவலகங்களும் சரி பார்க்க முடியும். இதன் மூலம் கணக்குகள் யாரால் எங்கு பரிசீலிக்கப்படுகிறது என்ற விபரம் கணக்கு தாக்கல் செய்பவருக்கு தெரியாது.

இதன் மூலம் வருமானவரித் தாக்கலில் முறைகேடுகள் ஒழிக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மை உருவாகும். மேலும் வருமானவரிக் கணக்கை ஒரே நபர் பரிசீலனை செய்யாமல் நான்கு பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து இறுதி முடிவு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.