காஷ்மீரிகளின் மனதை இப்படியும் வெல்லலாம்..! சாதித்துக் காட்டிய தமிழக ராணுவ மேஜர்..!

4 November 2020, 3:11 pm
kashmir_kamalesh_mani_Gawhaar_Mir_UpdateNews360
Quick Share

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எனும் சொற்றொடர் இந்தியாவின் பன்முகத்தன்மையை விவரிக்கும் ஒரு மேற்கோள். அந்த பன்முகத்தன்மை பெரும்பாலும் வேறுபட்ட புவியியல் சூழ்நிலைகளில் வாழும் மக்களின் பிணைப்புக்கு மிகவும் சிரமமானது.

ஆனால் அது எப்போதும் சிரமமாகவே இருப்பதில்லை என்பதை மேஜர் கமலேஷ் மணியுடன் காஷ்மீரியான காவர் மிர் எனும் சிறுவன் கொண்டுள்ள பிணைப்பின் மூலம் உணர முடியும்.

திருப்பத்தூரைச் சேர்ந்த மேஜர் கமலேஷ் மணி, வடக்கு காஷ்மீரின் ஹண்ட்வாரா நகரில் பணியமர்த்தப்பட்டார். அங்குதான் 16 வயதான காவர் மிரை 2020’ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதல்முறையாக சந்தித்தார்.

“நான் தெருக்களில் ரோந்து சென்றபோது இந்த சிறுவனைக் கண்டேன். அப்போது நான் அவருக்கு ஒரு சாக்லேட் வழங்கினேன். விரைவில், அவர் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடரத் தொடங்கினார்.” என்று இப்போது சென்னையில் குடியேறிய கமலேஷ் மணி நினைவு கூர்ந்தார்.

“அவர் என்னை ராணுவ முகாமில் தினமும் சந்திப்பார். நான் கடமையில் இருந்து திரும்பும் வரை எனக்காக காத்திருப்பார். அவருடைய அன்பு என் இதயத்தைத் தொட்டது.” என கமலேஷ் மணி மேலும் கூறினார்.

காவர் மிர் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். காவர் மிர் உட்பட அவரது குடும்பத்தில் நான்கு பேர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள். காவரின் தந்தை டிராக்டர் டிரைவராக வேலை செய்கிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பதற்றம் இருந்தபோதிலும், காவரின் குடும்பத்தினர் ஆயுதங்களுடன் இருந்த கமலேஷ் மணியை எப்போதும் திறந்த மனதுடன் வரவேற்றனர்.

இது ஒரு கட்டத்தில் கமலேஷ் மணியை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாற்றி விட்டது என சொல்லும் அளவுக்கு கமலேஷ் மணியிடம் அவர்கள் அன்பு காட்ட ஆரம்பித்து விட்டனர்.

“நான் காவரின் குறைபாட்டைப் போக்க மருத்துவ ஆலோசனைகளுக்காக அழைத்துச் சென்றேன். ஆனால் காஷ்மீரில் அது மட்டுமே செய்ய முடிந்ததாக இருந்தது. இதையடுத்து சிறந்த மருத்துவ வசதிகளுக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிறுவனின் குடும்பத்தினரிடம் நான் அனுமதி கோரியுள்ளேன்.” என்று 29 வயதான மேஜர் கமலேஷ் மணி மேலும் கூறினார். அவர் மேலும் காவரின் படிப்புக்கும் உதவி வருகிறார்.

Views: - 22

0

0

1 thought on “காஷ்மீரிகளின் மனதை இப்படியும் வெல்லலாம்..! சாதித்துக் காட்டிய தமிழக ராணுவ மேஜர்..!

Comments are closed.