மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படியை 32 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்..!

Author: Sekar
13 March 2021, 8:14 pm
7th_pay_commission_bonus_Updatenews360
Quick Share

கொரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செயல்முறை இந்தியாவில் வேகமெடுத்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வந்த அகவிலைப்படி எனும் டிஏ உயர்வை, 2021 ஜூன் 30’ஆம் தேதி வரை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில், மாநிலங்கவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த அகவிலைப்படி மீதான தடையை தற்போது நீக்குவது குறித்து அரசு சிந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

டிஏ தடை நீக்கத்தால் கிடைக்கும் நன்மை :

2019 இறுதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ அலவன்ஸ் அடிப்படை சம்பளத்தில் 17% ஆக இருந்த நிலையில், கடந்த 2020 ஜனவரி தொடக்கத்தில் டிஏ 4% உயர்த்தப்பட்டது. எனினும் பின்னர் கொரோனாவால் டிஏ உயர்வுக்குத் தடை போடப்பட்டது.

தடை போடப்பட்டதால் வழக்கமாக பின்னர் கடந்த 2020 பிற்பகுதியில் வழங்கப்பட வேண்டிய 3% டிஏ உயர்வு மற்றும் 2021 ஜனவரியில் வழங்கப்பட வேண்டிய 4% டிஏ உயர்வுவும் நின்று போனது.

ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு முறை டிஏ உயர்வு மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில், கொரோனாவால் நின்று போன டிஏ உயர்வுக்கான தடை நீக்கப்படும்போது, ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வருட அளவில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய டிஏ உயர்வை ஒன்று சேர்த்து 11% அளவிற்கு உயர்த்தப்படும். இதனால் டிஏ 17% எனும் அளவில் இருந்து 28% ஆக உயரும்.

மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட வேண்டிய டிஏ அலவன்ஸ் உயர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 15% உயர்ந்து 32% டிஏ கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக அடிப்படை பணியில் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் அடிப்படை ஊதியமாக ரூ 18,000 இருக்கும். 15% டிஏ உயர்வு என்றால் மாதத்திற்கு 2,700 ரூபாயும், ஆண்டிற்கு 32,400 ரூபாயும் சம்பளத்தில் உயரும்.

அரியர் தொகை கிடைக்குமா?

கடந்த 2020’ஆம் ஆண்டில் டிஏ உயர்வு நிறுத்தப்பட்டதால், 2021 ஜூன் 30’ஆம் தேதி வரையிலான டிஏ அரியர் தொகை செலுத்தப்படாது என மத்திய அரசு முன்னரே தெளிவாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

எனினும், தடை போடப்பட்ட காலத்திற்கான அரியர் தொகையைத் திரும்ப பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அவசரநிலை காலத்திலும் முடக்கப்பட்ட டிஏ :

தற்போது கொரோனா பெருந்தொற்றால் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தியுள்ள நிலையில், மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தியுள்ளது.

அவசர காலங்களில் டிஏ கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவது வாடிக்கையான ஒன்று தான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, கடந்த 1975’இல் அவசரநிலை பிரகடனம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டபோது, அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டு, பின்னர் திருத்தியளிக்கப்பட்டது என நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Views: - 106

0

0