2020 பள்ளி பொதுத் தேர்வுகள்..! 12’ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய், தந்தை, மகன்..!
2 August 2020, 12:33 pmமார்ச் 19 அன்று, கொரோனா பரவுவதைத் தடுக்க இந்தியா முதன்முதலில் ஊரடங்கில் நுழைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரத்தில் ஒரு தம்பதியினர் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தி கிடைத்தது. அவர்களின் 12’ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வந்துவிட்டன. அதில் தம்பதி இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் தற்போது நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்களின் கொண்டாட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவரான அவர்களின் மகனும் தனது 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது தான் இந்த கொண்டாட்டங்களுக்குக் காரணமாகும்.
ஜூலை நடுப்பகுதியில், முகமது முஸ்தபா, அவரது மனைவி நுசைபா மற்றும் அவர்களது மகன் ஷம்மாஸ் ஆகியோர் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றதை ஒரு குடும்பமாக கொண்டாடினர்.
முஸ்தபா, 43 வயதான தொழிலதிபர், வேலை தேடி தனது 10 ஆம் வகுப்பு முடித்த சிறிது காலத்திலேயே சிறுவனாக வளைகுடாவுக்குச் சென்றிருந்தார். அபுதாபியில் உள்ள ஒரு கால்நடை மருத்துவ மனையில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது சொந்த ஊருக்குச் சென்றபோது, நுசைபாவை மணந்தார். அவரும் கணவருடன் அபுதாபிக்கு சென்று அங்கேயே வாழ்ந்தார். ஆனால் தான் 12’ஆம் வகுப்பு முடிக்காதது குறித்து தொடர்ந்து வருத்தமாகவே இருந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நாடு திரும்பியபோது, நுசைபாவின் விருப்பத்தை நினைவில் கொண்டு முஸ்தபா, 12’ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதுவதற்கான வழிகள் குறித்து பல மையங்களில் விசாரிக்கத் தொடங்கினார்.
கேரள எழுத்தறிவு மிஷனின் சமநிலை தேர்வுகள் குறித்து மங்கள பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு அறிவிப்பு பலகையைப் பார்த்தார். அவரும் நுசைபாவும் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகளில் சேர முடிவு செய்தனர். இது வார இறுதி நாட்களிலும், வணிக நேரங்கள் முடிந்ததும் மாலை நேரத்திலும் படிக்க நேரம் கொடுத்தது.
“நாங்கள் இருவரும் ஒன்றாக வியாபாரத்தில் பணியாற்றி வருகிறோம். எங்கள் மகன், எங்கள் சேர்க்கை பற்றி உற்சாகம் கொண்டார். அவர் எங்கள் சந்தேகங்களுக்கு உதவுவார். மேலும் எங்களிடம் கேள்விகளைக் கேட்பார். அவர் எப்போதும் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தார். 10 மற்றும் 11’ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் A + ஐ அவர் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் காரணமாக வகுப்புகளில் இடைவெளி ஏற்பட்டபோது, கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. மேலும் அவர் ஒரு பாடத்திற்கு A + ஐ மட்டும் மூன்று மதிப்பெண்களால் தவறவிட்டார்.” என்று பெருமையுடன் தந்தை முஸ்தபா கூறினார்.
அவர்களின் முயற்சிகள் பலனளித்தன. பெற்றோர் இறுதியில் தங்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டனர். நுசைபா 80%’க்கும் அதிகமாக பெற்றார். முஸ்தபாவும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.