மேகதாது அணை விவகாரம் : தமிழக பாஜக Vs கர்நாடகா பாஜக இடையே வெடிக்கும் மோதல்..!!

Author: Babu
31 July 2021, 6:37 pm
basuvaraj bommai - vs annamalai - - updatenews360
Quick Share

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதல் தற்போதைய முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை வரை மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழக பாஜகவும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது.

அண்மையில் மேகதாது அணையை கட்டும் கர்நாடகா அரசின் முடிவை கண்டித்து ஆக.,5ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதனிடையே, கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பசுவராஜ் பொம்மை, டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை, “மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு. காவிரி நீர் எங்கள் உரிமை. ஏற்கனவே கர்நாடக அரசு முதல் திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கு ஒப்புதல் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி,” என்றார்.

அப்போது, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Basavaraj Bommai -Updatenews360

அதற்கு பதிலளித்த அவர், “கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை “யார் சாப்பிட்டாலும் சாப்பிடாமல் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. மேகதாது அணை கட்டப்படும்” எனக் கூறினார். அவரது இந்த பதில் தமிழக பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

annamalai bjp - updatenews360

இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சரின் இந்த விமர்சனம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், “மேகதாது அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகா அரசால் மேகதாதுவில் புதிய அணையை கட்ட முடியாது,” என பதிலடி கொடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகாவினரிடையே வார்த்தை போர் முற்றிய நிலையில், இதற்கான தீர்வு மத்திய அரசிடமே இருப்பதே நிதர்சனமான உண்மையாகும்.

Views: - 202

0

0