மும்பை டப்பாவாலாக்கள் போராட்ட எச்சரிக்கை..! லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்..!

21 September 2020, 2:14 pm
dabbawala_updatenews360
Quick Share

மும்பையில் உள்ள டப்பாவாலாக்கள் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாக எச்சரித்துள்ளனர். 

அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து மதிய உணவைச் சுமந்து சென்று வழங்கும் மும்பை டப்பாவாலாக்கள் உலக பிரசித்தி பெற்றவர்கள். கொரோனா வெடிப்பின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இயங்கும் மும்பையின் டப்பாவாலாக்கள் உள்ளூர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்குமாறு மகாராஷ்டிரா அரசாங்கத்தை முன்னர் வலியுறுத்தியிருந்தனர். 

இதனால் தாங்கள் முழு திறனுடன் மீண்டும் தொழிலை தொடங்க முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது, ​​அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“மும்பைக்காரர்களுக்கு உணவை வழங்கும் டப்பாவாலாக்களும் அத்தியாவசிய சேவைகளின் ஒரு பகுதியாவர். பெரும்பாலான அதிகாரிகள் இப்போது குறைந்த திறனுடன் செயல்படுவதால், மக்கள் தங்கள் உணவை வழங்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று மும்பை டப்பாவாலா சங்கத்தின் தலைவர் சுபாஷ் தலேகர் தெரிவித்தார்.

தற்போது, ​​தெற்கு மும்பை பகுதியில் மட்டும் செயல்பட்டு வரும் டப்பாவாலாக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப உணவு வழங்கி வருகின்றனர். புறநகர் பகுதிகளிலிருந்து நகரின் மையப்பகுதிக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் டிஃபின்களை வழங்கும் சுமார் 4,500 முதல் 5,000 டப்பாவாலாக்கள் தற்போது வேலையில்லாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்டுமானத் தொழிலாளர்கள் பெற்றதைப் போலவே, மாநில அரசாங்கத்திடம் இருந்து டப்பாவாலாவுக்கும் ரூ 5,000 நிதி உதவி கோருகிறோம் என்று தலேகர் கூறினார். இந்த திட்டம் மாநில அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இன்னும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

“டிஃபின் சேவைகளின் 130 ஆண்டுகால வரலாற்றில் இதற்கு முன்னர், ஆறு மாத இடைவெளி ஏற்பட்டதில்லை. அலுவலகத்திற்குச் செல்வோர் சரியான நேரத்தில் உணவைப் பெறுவதையும், வெற்று மதிய உணவுப் பெட்டிகளைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்.” என்று அவர் கூறினார் .

கடந்த ஆறு மாதங்களில், சமூக அமைப்புகளும், தன்னார்வலர்களும் சங்கத்திற்கு நிதி ரீதியாக ஆதரவளித்துள்ளனர். இதன் காரணமாக வேலையில்லாமல் இருந்த டப்பாவாலாக்களுக்கு ஊரடங்கு காலத்தில் பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே டப்பாவாலாக்களுக்கு ஆதரவாக, மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள உள்ளூர் ரயில்களில் பொது மக்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் மகாராஷ்டிரா நவ நிர்மன் சேனாவின் ராஜ் தாக்கரே தலைமையில் சட்டத்தை மீறி ரயிலில் பயணம் செய்யும் போராட்டத்தை மேற்கொண்டது

Views: - 0

0

0