பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Author: Sekar
31 March 2021, 3:07 pm
bahadur_ali_updatenews360
Quick Share

டெல்லி சிறப்பு என்ஐஏ நீதிமன்றம், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிக்கு, டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான பகதூர் அலி மீது என்ஐஏ தொடர்ந்த வழக்கில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் உள்ள என்ஐஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது.

இந்த வழக்கு, ஜூலை 2016’இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நடத்திய ஒரு பெரிய சதி தொடர்பான வழக்கு இது என்று என்ஐஏ அதிகாரி தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, பகதூர் அலி தனது இரு கூட்டாளிகளான அபு சாத் மற்றும் அபு தர்தா ஆகியோருடன், லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் அனைவரும், ஜம்மு-காஷ்மீருக்கு சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தலைமையின் அறிவுறுத்தல்களின் படி, டெல்லி உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என அந்த அதிகாரி கூறினார்.

இந்நிலையில் குப்வாராவிலிருந்து பகதூர் அலி கைது செய்யப்பட்டார் மற்றும் அவரிடமிருந்து பல நவீன ஆயுதங்கள், இராணுவ வரைபடம், வயர்லெஸ் செட், ஜிபிஎஸ், திசைகாட்டி, இந்திய ரூபாய் நோட்டுக்கள், போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அலி மீது என்ஐஏ 2017 ஜனவரியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. பின்னர், குப்வாராவில் பிப்ரவரி 2017’இல் நடந்த ஒரு மோதலில் மற்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளான சாத் மற்றும் தர்தா கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணையின் போது, ​​ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் அலியின் இரண்டு கூட்டாளிகளான ஜாகூர் அஹ்மத் பீர் மற்றும் நஜீர் அகமது பீர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் என என்ஐஏ அதிகாரி கூறினார். அவர்கள் இருவருக்கு எதிரான வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Views: - 169

0

0