சமூக ஊடகங்களில் பதிவிட்டால் கைதா..? கேரள அரசின் புதிய சட்டத்தால் வலுக்கும் எதிர்ப்புகள்..!

22 November 2020, 6:00 pm
Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ள சமூக ஊடக பதிவுகளுக்கு எதிரான புதிய சட்டம் குறித்து மக்களிடையே எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் தற்போது இந்த சட்டம் யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் தடுக்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல்களைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் உறுதியளித்தார்.

எல்.டி.எஃப் தலைமையிலான அரசாங்கம் சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டத்தை அறிவித்த பின்னர் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் அச்சுறுத்தல், துஷ்பிரயோகம், அவமானகரமான முறையிலான தாக்குதல் என்று கருதப்படும் பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டு அண்மையில் மீண்டும் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல்களைத் தடுக்க கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டுவரப்பட்ட இந்த அவசர சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை காவல்துறைக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதோடு கருத்துச் சுதந்திரத்தை குறைக்கும் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகளுடன் பல்வேறு மக்கள் அமைப்புகளும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததால், கேரள அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்தத் திருத்தத்தை விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “கேரளாவின் எல்.டி.எஃப் அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு எதிரான குரல்களை மௌனமாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

“இது முழுமையான பாசிசம். தங்கக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் மாநில அரசுக்கு எதிராக வெளிவந்துள்ளன. இவை ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டன. அதை முடக்கும் முயற்சி தான் இது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

இருப்பினும், முதலமைச்சர் குற்றச்சாட்டுகளை மறுத்து, தனிநபர்களின் பிம்பத்தை கெடுப்பதற்காக சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்வது போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

1 thought on “சமூக ஊடகங்களில் பதிவிட்டால் கைதா..? கேரள அரசின் புதிய சட்டத்தால் வலுக்கும் எதிர்ப்புகள்..!

Leave a Reply