ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம்..? எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார் வெங்கையா நாயுடு..!

21 September 2020, 11:35 am
Parliament_UpdateNews360
Quick Share

அரசியலமைப்பின் 90’வது பிரிவின் கீழ் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மாநிலங்களைவையின் துணைத்தலைவரான ஹரிவன்ஷுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 100 ராஜ்யசபா உறுப்பினர்கள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை நிராகரித்தார்.

விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நேற்று பல்வேறு ரகளைகளுக்கிடையில் நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து, மறு ஆய்வு செய்ய தேர்வுக்குழுவுக்கு அவை அனுப்பப்பட வேண்டும் என்று கோரி சபையை முடக்க முயற்சித்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஹரிவன்ஷின் இருக்கைக்கு சென்று ரகளையில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹரிவன்ஷைப் பாதுகாப்பதற்கும் ஒரு சபை உறுப்பினரை வெளியேற்றுவதற்கும் இரட்டை அடுக்கு தடுப்பை அமைக்க காவலர்கள் அழைக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு முடக்கப்பட்டன என்று கூறின.

சபை ஒத்திவைக்கப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தயாரித்த பின்னர் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களில் காங்கிரஸ், திமுக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அடங்குவர்.

இந்நிலையில் சபை நடவடிக்கைளை முடக்கும் விதமாக ரகளையில் ஈடுபட்ட உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தற்போது ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

Views: - 7

0

0