உ.பி. அரசியல் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி?: பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் யோகி ஆதித்யநாத்..!!

11 June 2021, 1:21 pm
Quick Share

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் டெல்லியில் இன்று சந்தித்தார்.

உத்தரபிரதேச முதலமைச்சராக செயல்பட்டு வருபவர் யோகி ஆதித்யநாத். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 5ம் தேதி தனது 49வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவரது பிறந்தநாளுக்கு அம்மாநில அரசியல் கட்சியினர் யோகி ஆதியநாத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய நபர்கள் யோகி ஆதித்யநாத்திற்கு தங்கள் டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பாஜக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2022ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் வரும் தேர்தலில் யோகி ஆதித்தநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் தான் சந்திக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுவேந்திர தேவ் சிங் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

இதன் மூலம், 2022 நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் களமிறங்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால், சட்டசபை தேர்தலை யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் சந்திக்க அம்மாநில பாஜக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உத்தரபிரதேச பாஜக கட்சியினர் இடையே குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், பாஜக கட்சித்தலைமையும் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.

2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் இடையே ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர் யோகி ஆதித்யநாத் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க உள்ளார். முன்னதாக, உள்துறை மந்திரி அமித்ஷாவை யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Views: - 163

1

0