கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார் பிரதமர் மோடி….!!

28 November 2020, 8:24 am
corona vaccine - updatenews360
Quick Share

புதுடெல்லி: அகமதாபாத், புனே, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சில வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3வது கட்டங்களில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார். முதலில், குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு காலை 9.30 மணிக்கு நேரில் செல்கிறார். அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2வது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிகிறார்.

மேலும், தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிடுகிறார். இந்த பயணத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி மராட்டிய மாநிலம் புனேவுக்கு செல்கிறார். அங்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு செல்கிறார். அந்த நிறுவனம், உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவுடனும், இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும் இணைந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது.

பகல் 1 மணிக்கு வரும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.30 மணிவரை அங்கு ஆய்வு செய்கிறார். தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் செல்கிறார். இந்திய விமானப்படை விமானத்தில் ஹக்கிம்பேட் விமானப்படை நிலையத்தில் இறங்குகிறார். அங்கிருந்து ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு செல்கிறார். இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3வது கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிகிறார். ஒரு மணி நேரம் அங்கு ஆய்வு செய்த பிறகு இன்று மாலையில் டெல்லி திரும்புகிறார்.

Views: - 22

0

0