ராஜீவ் போல பிரதமர் மோடியும் இறப்பார்… மர்மநபர் அனுப்பிய கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 2:33 pm
Rajiv Modi - Updatenews360
Quick Share

பிரதமர் மோடி வருகிற ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

இதன்படி அவரது சுற்றுப்பயணம் டெல்லியில் தொடங்குகிறது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு அவர் செல்கிறார். ரேவா நகரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதன்பின்பு, ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்கிறார். பின்னர், தென்னிந்திய பகுதியான கேரளாவுக்கு அடுத்த நாள் காலை (25-ந்தேதி) 10.30 மணியளவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அவர் இந்த பயணத்தில், 11 மாவட்டங்களை இணைக்க கூடிய வகையிலான, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்.

அதன்பின் காலை 11 மணியளவில், திருவனந்தபுரம் நகரில் ரூ.3,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதனை தொடர்ந்து, குஜராத்தின் சூரத் நகர் வழியாக அவர் சில்வாசா நகரத்திற்கு செல்கிறார். அந்த நகரில், ரூ.4,850 கோடிக்கும் கூடுதலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

அதன்பின்பு மேற்கு பகுதியில் அமைந்த டாமனுக்கும் சென்று விட்டு, இறுதியாக டெல்லிக்கு திரும்ப இருக்கிறார். அவருடைய இந்த பயணத்தில், 7 வெவ்வேறு நகரங்களுக்கு சென்று 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளார்.

இந்த நிலையில், கேரளாவில் உள்ள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்து உள்ளது. அதில், பிரதமர் மோடியின் கேரள பயணத்தின்போது, தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் என அந்த மர்ம கடிதத்தில் இடம் பெற்று இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து, சுரேந்திரன் அதனை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார். இதுபற்றிய விவரங்கள் இன்று காலை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மிரட்டல் கடிதம் பற்றி போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

கடிதம் அனுப்பிய நபர் என்.கே. ஜானி என அதில் குறிப்பிட்டு உள்ளார். கொச்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. எனினும் அவர், ஜோசப் ஜான் நாடு முத்தமிழ் என்றும் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றொரு தகவல் தெரிய வந்து உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நடந்தது போன்று நடக்கும் என கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது. எனினும், இதுபற்றி ஜானியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும் தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய நபர் இந்த அச்சுறுத்தல் கடிதத்திற்கு பின்னணியில் இருக்க கூடும் என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

அந்த கடிதம் மலையாளத்தில் எழுதப்பட்டு உள்ளது. ஜானியின் கையெழுத்தும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும் ஒன்றாக இல்லாத நிலையில், போலீசாரிடம் சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்களை ஜானி கூறியுள்ளார்.

எனினும், பிரதமரின் பயணம் பற்றி குறிப்பிட்டு பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறும்போது, வி.வி.ஐ.பி. பாதுகாப்பு திட்ட விவரங்களை, கசிய விட்டதற்காக கேரள போலீசாருக்கு தனது கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.

Views: - 2398

0

1