ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு சிறப்பு விருந்தளித்த பிரதமர் மோடி: பதக்கங்களை காட்டி மகிழ்ந்த வீரர்கள்…!!

Author: Aarthi Sivakumar
16 August 2021, 3:34 pm
Quick Share

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் விருந்து அளித்து மகிழ்ந்தார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 33 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி பரவசப்படுத்தினர். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

தடகளப் போட்டியில் 120 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தங்கத்தை வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா, புதிய சாதனை நாயகனாக திகழ்ந்தார். பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில் நேற்று நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை வெகுவாக பாராட்டினார்.

latest tamil news

குறிப்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், தேசத்தின் இதயங்களை வென்றது மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினரையும் ஊக்குவிப்பதாக உள்ளனர் என்றார். இந்நிலையில் இன்று ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் பிரதமர் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்தில் பங்கேற்றனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, தாங்கள் வாங்கிய பதக்கங்களை பிரதமரிடம் காட்டி வீரர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அப்போது தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் குழுவினருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Views: - 380

0

0