போலீஸின் தடுப்புக்காவலில் இருக்கும் பிரியங்கா காந்தி உண்ணாவிரதம் : அறையை தூய்மை செய்யும் வீடியோ வைரல்

Author: Babu Lakshmanan
4 October 2021, 12:37 pm
Quick Share

லக்கிம்பூரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். பிரியங்கா காந்தியின் கைதுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் பிரியங்கா காந்தி, தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். மேலும், அவர் அறையை தூய்மை செய்வது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 223

0

0