கோவில் பூசாரி எரிப்பு விவகாரம்..! குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு அறிவித்தது ராஜஸ்தான் அரசு..!

By: Sekar
10 October 2020, 7:30 pm
rajasthan_karauli_protest_updatenews360
Quick Share

ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலியில் நில அபகரிப்பாளர்களால் உயிருடன் எரிக்கப்பட்ட கோவில் பூசாரியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ராஜஸ்தான் அரசு ரூ 10 லட்சம், அரசு வேலை மற்றும் ரூ 1.5 லட்சம் உதவி உதவி அறிவித்துள்ளது. மேலும் உள்ளூர் காவல்நிலைய அதிகாரி மற்றும் பட்வாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற ஐந்து பேரால் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர் கோவில் பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த சம்பவத்தை கண்டித்து, முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார். அதே நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், மாநிலத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று கூறிய எதிர்க்கட்சியான பாஜகவை விமர்சித்தார்.

கரௌலி மாவட்டத்தின் புக்னா கிராமத்தில் புதன்கிழமை ஐந்து பேர் பூசாரி பாபு லால் வைஷ்ணவை விவசாய பண்ணை அருகே பிடித்து தீ வைத்தனர். ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இரவு இறந்தார்.

“முக்கிய குற்றவாளியான கைலாஷ் மீனா கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்” என்று கரௌலி காவல் கண்காணிப்பாளர் மிருதுல் கச்சாவா தெரிவித்தார்.

சபோத்ரா காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பூசாரி இறந்த பின்னர் இது ஒரு கொலை வழக்காக மாற்றப்பட்டதாகவும் எஸ்.பி. தெரிவித்தார்

இழப்பீடு மற்றும் அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான இறுதிச் சடங்குகள் செய்வோம் என இறந்தவரின் உடலை வைத்து போராட்டம் நடத்திய உறவினர்கள், அரசு 10 லட்ச ரூபாய் நிதியுதவி, வீடு மற்றும் அரசு வேலை உள்ளிட்டவற்றை அறிவித்ததை அடுத்து, இறந்தவருக்கு அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தனர்.

Views: - 40

0

0