வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா : காதில் ஓதிய காங்., தலைவர்.. சிரிப்பலையில் சட்டசபை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 5:00 pm
siddaramaiah Dhoti- Updatenews360
Quick Share

கர்நாடகா : வேட்டி அவிழ்ந்ததை கூட தெரியாமல் சட்டசபையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மெய்மறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது.

கூட்டம் கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. பின்னர் பூஜ்ஜிய நேரத்தை சபாநாயகர் அனுமதித்தார். இதையடுத்து மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து விதி எண் 69-ன் கீழ் விவாதம் நடத்த சபாநாயகர் காகேரி, அனுமதியிள்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் குறித்த விவரங்களை எடுத்து கூறி பேசிக் கொண்டிருந்தார். அப்போது சித்தராமையாவின் வேட்டி திடீரென்று அவிழ்ந்து கீழே இறங்கியது. இதை கவனிக்காமல் சித்தராமையா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

ஆனால் அவரது வேட்டி அவிழ்ந்ததை அதே வரிசையில் அமர்ந்திருந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கவனித்துள்ளார். மேலும் அதை சித்தராமையாவே உணர்ந்து சரி செய்து விடுவார் என காத்திருந்தார்.

ஆனால் சித்தராமையா அதை கவனிக்காமல் பேசியபடி இருந்தார். இதையடுத்து டி.கே.சிவக்குமார், தனது இருக்கையை விட்டு எழுந்து சித்தராமையாவின் காது அருகில் வந்து, உங்கள் வேட்டி அவிழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

உடனே இருக்கையில் அமர்ந்த சித்தராமையா, வேட்டி கழன்றுள்ளது என்று கூறி அவிழ்ந்த வேட்டியை மீண்டும் சரிசெய்தார். அப்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்துவிட்டனர்.

அப்போது பேசிய சித்தராமையா, அமைச்சர் ஈசுவரப்பாவை பார்த்து எனது வேட்டி கழன்றுவிட்டது, என்னவென்று தெரியவில்லை, சமீப நாட்களில் எனது வயிறு சற்று பெரிதாகிவிட்டது. எனக்கு கொரோனா வந்ததற்கு பின் உடல் எடை 5 கிலோ வரை அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் இவ்வாறு நடந்து விடுகிறது. வேட்டியை சரிசெய்துவிட்டு பேசுகிறேன்“ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், “நமது கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் மானம் சம்பந்தப்பட்டது என்பதால் உங்களின் காது அருகில் வந்து, வேட்டி கழன்றதை ரகசியமாக கூறியுள்ளார். ஆனால் நீங்கள் வேட்டி கழன்றதை ஊருக்கே கூறிவிட்டீர்களே. இதனால் அவரது முயற்சி வீணாகிவிட்டது. உங்களுக்கு எங்களின் வேட்டியை கழற்றுவது தான் வேலை. ஈசுவரப்பாவை பாருங்கள் அதற்காக காத்திருக்கிறார்“ என்றார்.

இது சபையில் சில நிமிடங்கள் ருசிகரமான விவாதமாக அமைந்தது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 174

0

0