பிப்ரவரி 1’ஆம் தேதி நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல்..! பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிப்பு..!
14 January 2021, 7:00 pmமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1’ம் தேதி மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் தொடங்கும் என்றும் இந்த அமர்வு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை என இரண்டு பகுதிகளாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
17’வது மக்களவையின் 5’வது அமர்வான இதில் 35 அமர்வுகள் இருக்கும். முதல் பகுதியில் 11 அமர்வுகளும் மற்றும் இரண்டாம் பாதியில் 24 அமர்வுகளும் இருக்கும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 29’ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இதையடுத்து பிப்ரவரி 1’ஆம் தேதி காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை முன்வைப்பார்.
அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்கவும், அவற்றின் அறிக்கைகளைத் தயாரிக்கவும், பாராளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களுக்கு உதவுவதற்காக நாடாளுமன்றம் பிப்ரவரி 15’ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 8’ஆம் தேதி மீண்டும் கூடும்.
கடந்த காலங்களில் இருந்ததைப் போல் அல்லாமல் இந்த பட்ஜெட்டில், கொரோனா காரணமாக அல்வா கிண்டுதல், பட்ஜெட் அச்சடிக்கும் முறை ரத்து செய்யப்பட்டு டிஜிட்டல் முறைக்கு மாற்றம் என பல்வேறு மாற்றங்கள் உள்ள நிலையில், கொரோனா காரணமாக நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு அதிக சலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.