மேகாலயாவில் நிலக்கரி சுரங்க விபத்து..! 6 தொழிலாளர்கள் பலி..!
22 January 2021, 9:21 pmமேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் ஆறு சுரங்கத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள், அசாமைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் ஒரு சுரங்கப்பாதையைத் தோண்டிக் கொண்டிருந்த நிலையில், அது உடைந்து 150 அடி ஆழத்தில் விழுந்தனர் என்றும் கூறப்படுகிறது.
சடலங்கள் இன்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக க்லீஹ்ரியாட்டில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
பலியான 6 பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களது குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் இ கர்மல்கி தெரிவித்தார்.
இந்த சம்பவம் 2018 டிசம்பரில் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்திற்குள் நடந்த இதேபோன்ற சோகத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது.
அப்போது நடந்த கோர விபத்தில் சுமார் 15 சுரங்கத் தொழிலாளர்கள் 370 அடிக்கு கீழே சிக்கினர். இந்திய கடற்படை உட்பட பல அமைப்புகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முயற்சித்த போதிலும், பாதிக்கப்பட்ட சிலரின் உடல்களை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது. ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் மட்டும் கம்பிகள் மூலம் ஏறி தப்பிக்க முடிந்தது.
நிலக்கரியின் மிகச்சிறந்த தரத்தைக் கொண்ட மேகாலயாவில் கடந்த காலத்தில் நிலக்கரிச் சுரங்க விபத்துக்கள் பல நடந்துள்ளன.
2014’ஆம் ஆண்டில், தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநிலத்தில் சுரங்கத்தை தடைசெய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக எலி-துளை நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சுரங்கத்தை தடை செய்தது. தடை இருந்தபோதிலும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்வது தான், இது போன்ற விபத்துகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
0
0