“கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்” – ராஜஸ்தான் முதல்வர் அனுமதி..!

27 August 2020, 12:53 pm
Quick Share

ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என மாநில முதல்வர் அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 32 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது.

இதன் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதையடுத்து, பொதுமக்கள் நலனை கருத்தில் கொன்டு அந்தந்த மாநிலத்தில் தொற்றின் வீரியத்தை அடிப்படையாக வைத்து தளர்வுகளை அறிவிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அந்தவகையில், மாநில முதலமைச்சர்கள் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதார அமைச்சர் ரகு சர்மா, தலைமை செயலாளர் ராஜீவா ஸ்வரூப் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்ட அசோக் கெலட் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதேவேளையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழிப்பாட்டு தலங்களில் சோதனைகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், வழிப்பாட்டு தளங்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு முதலமைச்சர் கெலட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

ராஜஸ்தானில் இதுவரை 14099 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 59579 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 992 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0