தி கேரளா ஸ்டோரி… தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை : பரபரப்பில் திரையுலகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2023, 10:12 am
The Kerala - Updatenews360
Quick Share

இந்தியில் தயாராகி இந்தி உட்பட, தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் என 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி கேரளா ஸ்டோரி. படத்திற்கு முன்னோட்டமாக வந்த ட்ரைலர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது, கேரளாவில் விடுதியில் தங்கி பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார். அதன் பின்னர் அவர்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள்.

திருமணத்தையடுத்து சிரியாவுக்கு செல்லும் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று ட்ரைலர் கூறுகிறது. இந்த திரைப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்து கண்டனம் தெரிவித்த கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது.

சங்பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்டது படம்தான் இந்த ‘தி கேரள ஸ்டோரி. கேரளாவில் காலூன்ற நினைக்கும் சங் பரிவார் கும்பல், தற்போது லவ் ஜிகாத் என்கிற விஷயத்தை கையில் எடுத்திருக்கிறது.

ஆனால் நீதிமன்றம், விசாரணை அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகம் கூட லவ் ஜிகாத் என்று ஒன்று கிடையாது என நிராகரித்துள்ளது. ஆனால் இதனை பரப்ப இந்த திரைப்படத்தை சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அதேபோல எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கேரளாவில் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என எதிர்பார்த்த நிலையில், தமிழக உளவுத்துறை அரசுக்கு ஓர் எச்சரிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி கேரள ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்வும், அது தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் சர்ச்சை எழும் வாய்ப்புள்ளது எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 336

0

0