உச்சத்தை தொட்ட போராட்டம்.. வடமாநிலங்களில் தமிழக ஓட்டுநர்கள் சிக்கி தவிப்பு? வெளியான வீடியோவால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 8:47 pm
Lorry Drivers
Quick Share

உச்சத்தை தொட்ட போராட்டம்.. வடமாநிலங்களில் தமிழக ஓட்டுநர்கள் சிக்கி தவிப்பு? வெளியான வீடியோவால் பரபரப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து முடிந்தது. அதில் எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம், இந்திய தண்டனைச் சட்டம் திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.

இந்திய தண்டனை சட்டம் என்பது ஆங்கிலேயர் கால சட்டம் என்று கூறி இதனை மாற்ற மசோதா ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்தது. இது வாக்கெடுப்புக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இதில் சில திருத்தங்களையும் அரசு மேற்கொண்டது. அதன்படி, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை, ஹிட் அண்ட் ரன் என்று சொல்லப்படும், சாலை விபத்துகளுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் திருத்தப்பட்டது.

இந்த சட்டத்திருத்தத்தால் தற்போது பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் சிக்கினால் 2 வருட சிறை தண்டனை இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல், கோஸ் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டள்ளதால் சாலைகளும் முடங்கியுள்ளன. லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

மறுபுறம், மக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வாகனங்கள் தவிர கேன்களிலும், பெட்ரோல், டீசல்களை நிரப்பி செல்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் நாங்கள் மத்திய பிரதேசத்தில் சிக்கி தவிக்கிறோம், எங்களுக்கு முன்பு 50 கிமீ வரை வாகனங்கள் நிற்பதாகவும், பின்னாடியும் வாகனங்கள் நிற்பதாகவும் மீறி எதிர் சாலையில் ஏறி சென்றால், கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார்கள். நாங்கள் நடுக்காட்டில் சிக்கியிருக்கிறோம். இங்கு எந்த கடைகளும் கிடையாது, உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். விபத்து ஏற்படுத்தினால் லட்சக்கணக்கில் அபராதம் கட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது. லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தால் நாங்கள் ஏன் லாரி ஓட்ட வருகிறோம்? குடும்ப கஷ்டத்தினால்தான் நாங்கள் லாரிக்கு வருகிறோம்.

லட்சக்கணக்கில் அபராதம் செலுத்துவது மட்டுமல்லாது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. 10 ஆண்டுகள் சிறை எனில், எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள். எதிர்பாராமல் நடப்பதால்தான் அதை விபத்து என்று சொல்கிறோம். இப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

Views: - 269

0

0