அரசியல் நெருக்கடி.. தீரத் சிங் ராவத் பதவியேற்ற 3 மாதங்களிலேயே ராஜினாமா…!

2 July 2021, 11:17 pm
Quick Share

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தீரத் சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து அளித்தார்.

பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வரான திரிவேந்திர ராவத், கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் முதல்வரின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததையடுத்து, மாற்றத்தை தலைமை விரும்பியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினரான அவர், முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் செப்டம்பர் 10ம் தேதிக்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், டெல்லியில் கடந்த 3 தினங்களாக கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் தீரத் சிங் ராவத். அப்போது தீரத் சிங் ராவத் பதவி விலக வேண்டும் என கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே, பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

ஐந்து மாநிலங்களில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தலை நடத்தியது கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ள இந்த நேரத்தில் இடைத்தேர்தல்களை நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு கடினமான முடிவு ஆகும். எனவே, முதல்வரை மாற்ற பாஜக முடிவு செய்திருக்கலாம் என தெரிகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வராக கடந்த 3 மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்ற உடனேயே, தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் குறித்து பேசியதை பெரும் சர்ச்சையானது. இதேபோல் 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டது பிரிட்டன் அல்ல அமெரிக்கா என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்று உச்சத்தில் கும்பமேளாவை அவர் கையாண்டதும், “ஆர்டி-பி.சி.ஆர் சோதனை தேவையில்லை” என்று அவர் பேசிய கருத்தும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன் பாஜக தலைவர்கள் மத்தியலும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு பாஜக கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Views: - 119

0

0