உத்தரகண்டில் மீண்டும் சோகம்..! மேக வெடிப்பால் வீடுகள் மற்றும் சாலைகள் சேதம்..!

11 May 2021, 9:50 pm
cloudburst_updatenews360
Quick Share

உத்தரகண்டின் தெஹ்ரி மாவட்டத்தின் தேவ்பிரயாக் பகுதியில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பால் பல வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான அறிக்கை எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

பேரிடர் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன” என்று டிஜிபி அசோக் குமார் கூறினார்.

“இன்று மாலை 5 மணியளவில் மேக வெடிப்பு பதிவாகியுள்ளது. சுமார் 12-13 கடைகள் மற்றும் பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. ஊரடங்கால் இந்த கடைகள் பெரும்பாலானவை மூடப்பட்டதால், இதுவரை எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இங்கு நீர் மட்டம் அதிகரித்து வருகிறது, மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.” என தேவ்பிரயாக் காவல்நிலைய அதிகாரி கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் தேவையான நிதி உதவிகளையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் தீரத் சிங் ராவத் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான அசௌகரியங்களும் ஏற்படாமல் இருக்க, மேக வெடிப்பால் அழிந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை (பி.டபிள்யூ.டி), இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) மற்றும் எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, இதே போல் கடந்த மே 3’ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மற்றும் உத்தரகாஷி மாவட்டங்களில் இரண்டு தனித்தனி மேக வெடிப்பு சம்பவங்களில் சில கிராமங்கள் மற்றும் சாலைகளில் வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 80

0

0