அதானிக்கு எதிராக பேச லஞ்சம் வாங்கினாரா? திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்பிக்கு சிக்கல்.. 2 மணிக்கு அதிரப் போகும் நாடாளுமன்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 1:32 pm
Mahau Moitra - Updatenews360
Quick Share

அதானிக்கு எதிராக பேச லஞ்சம் வாங்கினாரா? திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்பிக்கு சிக்கல்.. 2 மணிக்கு அதிரப் போகும் நாடாளுமன்றம்!

நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜகவின் எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அல்லது நன்னடத்தை குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அறிக்கையை நன்னடத்தைக் குழு வெளியிட்டிருந்தது. மஹூவா மொய்த்ரா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

நன்னடத்தை குழுவில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக காங்கிரஸ் வாக்களித்தது.

இந்த நிலையில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை இன்று கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார்.

அப்போது இப்பரிந்துரை அறிக்கை மீது விரிவான விவாதம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதேபோல லோக்சபாவில் எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பலரும் மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் லோக்சபாவில் கடும் அமளி நீடித்தது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அப்போது சபையில் இருந்து வெளியே வந்த மஹூவா மொய்த்ரா, பரிந்துரை அறிக்கை இன்னமும் வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பின் லோக்சபாவுக்கு மீண்டும் வருவேன். என்ன நடக்கிறது என்பதை பகல் 2 மணிக்கு பின்னர் பார்க்கலாம் என்றார்.

முன்னதாக தமக்கு எதிரான பரிந்துரை அறிக்கை தாக்கல் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹூவா மொய்த்ரா, நீங்கள் மகாபாரதப் போரை பார்க்கப் போகிறீர்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஒரு மனிதன் அழியும் போது மனசாட்சிதான் மரணிக்கிறது என்கிற கவிதை வரிகளையும் மஹூவா மொய்த்ரா மேற்கோள்காட்டினார்.

Views: - 265

0

0