அடப் பாவிகளா இதை வைத்தும் சூதாட்டமா..! நுழைவுத் தேர்வுகள் நடக்குமா நடக்காதா என சூதாட்டம் நடத்திய 7 பேர் கைது..!
29 August 2020, 10:41 amஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா இல்லையா? இந்த கேள்வி குறித்து நாட்டின் மாணவர்கள் அல்லது அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாது, தற்போது சூதாட்டக்காரர்களிடமும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் நேற்று இது தொடர்பாக நடந்த ஒரு சூதாட்ட மோசடியையும் அதில் ஈடுபட்ட கும்பலையும் போலீஸ் கைது செய்துள்ளது.
ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையிலும், நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 அன்று நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு அதற்கான அட்மிட் கார்டுகளையும் வெளியிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க தற்போது நுழைவுத் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று ஒரு தரப்பு மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகளும் பேசி வருகின்றன.
முன்னதாக நுழைவுத் தேர்வை ஒத்திவைத்து, மாணவர்களின் நலனை வீணடிக்க முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றம், தேர்வை நடத்த அனுமதியளித்திருந்த நிலையில், பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் ஆறு மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்றத்தில் மாரு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த பரபரப்புகளுக்கிடையில், இதை வைத்து காசு பார்க்க முடிவு செய்த ஒரு கும்பல், நுழைவுத் தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? எனும் சூதாட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உத்தரபிரதேச போலீசார் நடத்திய விசாரணையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களிடமிருந்து 10 மொபைல் போன்களும் ரூ 38.25 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இருப்பினும், மோசடியின் மூளையாக செயல்பட்ட நபர் தப்பித்து விட்டதாகவும், அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் கான்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.