‘ஜெய் அமராவதி’ கோஷம்… விழிபிதுங்கிய அமைச்சர் ரோஜா ; திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த போது நிகழ்ந்த சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
2 February 2024, 12:05 pm
Quick Share

திருப்பதி மலையில் அமைச்சர் ரோஜாவை சூழ்ந்து எதிர்ப்பு கோஷம் போட்டு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு பெண்கள் அதிருப்தி தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நிலையில், கோவிலில் இருந்து வெளியில் வந்த அவரை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்ய வந்திருக்கும் பெண் தன்னார்வலர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, அவர்களில் சிலர் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அபிவிருத்தி செய்ய வற்புறுத்தி “ஜெய் அமராவதி” என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் ஜெய் அமராவதி என்று கோஷம் எழுப்புமாறு ரோஜாவையும் அவர்கள் கேட்டு கொண்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது . ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சி பொறுப்புக்கு வந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்து தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதனால். அப்போது முதல் ஜெய் அமராவதி என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று கூறி அமைக்க தவறிவிட்டார். ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமராவதியை தலைநகராக அபிவிருத்தி செய்வோம் என்று கூறும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஜெய் அமராவதி என்பதை அரசியல் கோஷமாக மாற்றி கோஷம் எழுப்பி வருகின்றனர்.

திருப்பதி மலைக்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த ரோஜாவை சூழ்ந்த தன்னார்வலர்கள் தெலுங்கு தேசம் கட்சியினர் எழுப்பும் கோஷத்தை எழுப்பியது விவாத பொருளாக மாறி உள்ளது.

Views: - 250

0

0