மதுபோதையில் கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. லாரியின் மீது மோதி விபத்து.. 13 மாணவிகள் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 11:45 am
Quick Share

கரூரில் முன்னாள் சென்ற லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 13 மாணவிகள் காயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எல்லையம்பாளையத்தில் தனியார் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

கரூர் மாநகரில் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் பாம்பு ஒன்று கடந்து செல்வதை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டி நடு ரோட்டில் நின்று விட்டார். அதனை தொடர்ந்து, வந்த லாரியும் திடீர் பிரேக் போட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னால் வந்த தனியார் பெண்கள் கல்லூரி பேருந்து முன்னால் நின்ற லாரி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தும், பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் முன் இருக்கை, கம்பிகளில் மோதியதில் 13 மாணவிகள் சிறு, சிறு காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசாரும், பொதுமக்களும் மாணவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தனியார் பெண்கள் கல்லூரி பேருந்து ஓட்டுநர் மகேஷ் என்பவர் மது பழக்கம் உடையவர் என்றும், இது போன்று ஏற்கனவே அடிக்கடி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும், இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஓட்டுநரிடம் மாணவிகள் கேட்டால் விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறு, இல்லை என்றால் கீழே இறங்கு என மிரட்டுவதாக மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

Views: - 579

3

0