ஈரோட்டில் முதற்கட்டமாக 120 பேர் தனிமை…

23 May 2020, 8:52 pm
Quick Share

ஈரோடு: கவுந்தபாடியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மருத்துவ குழுவினர் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 42வீடுகளை சேர்ந்த 120 பேர் முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. பின்னர் மொத்தம் 70 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பெருந்துறையை சேர்ந்த 60வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 69 நபர் பூரண குணமடைந்தனர். இந்நிலையில் 37 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் சேலத்தில் எலும்பு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்ற போது அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கொரோனா பாதிப்புக்குள்ளான நபருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவுந்தப்பாடி திருவள்ளூர் வீதியில் அவர் வசித்து வந்த பகுதியில் 42 வீடுகளை சேர்ந்த 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் சுகாதார பணியாளர்கள் தனிமைபடுத்தப்படதற்கா துண்டு பிரசுரம் ஒட்டினர். மேலும் அப்பகுதியினருக்கு ரத்த பரிசோதனை, சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மேலும் அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட நபர்களை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பச்சை மண்டலமாக இருந்து வந்த ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடதக்கது.