கடல் பசுக்களை பாதுகாக்க கோரி வழக்கு… அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

31 July 2020, 4:58 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: கடல் பசுக்களை பாதுகாக்க இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் கடல் பசு ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக குறைந்த அளவில் மட்டுமே காணப்படுகிறது. இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இணைய தளத்தில் இந்தியாவில் 200 கடல் பசு மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடல் பசு கடலில் உள்ள புல்களை மட்டுமே உணவாக உற்கொள்ளும். ஆனால் சில ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் மீன்பிடிக்கு செல்லும் போது இரட்டை வடி வலையை பயன்படுத்துவதால் ஆழ்கடலில் உள்ள புல்களை அழிந்துவிடுகிறது.

இதனால் கடல் பசுக்கள் உணவின்றி உயிரிழந்துவிடும் அபாயம் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் மட்டுமே கடல் பசுக்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 முதல் 4 வயதான கடல் பசு உடல் மற்றும் கண்ணில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் அதிராமப்பட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை கடல்பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்ப்பட்டது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கடல் பசுக்களை பாதுகாக்க இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன்,ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ஆழ்கடல் பகுதியில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இரட்டை மடி வலையை மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக இந்திய வனவிலங்கு நிறுவனத்தை எதிர் மனுதாரராக சேர்த்து, வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.