மதுபானம் வாங்க வந்த வாகனங்கள் பறிமுதல்… எச்சரித்தும் எல்லை மீறிய மதுபிரியர்கள்…

23 May 2020, 4:40 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மதுபானம் வாங்குவதற்காக வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் பொன்னேரி கும்மிடிப்பூண்டி சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் சென்னை புறநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது வாகனங்களில் ஊரடங்கு உத்தரவையும் மீறி மதுபானங்களை வாங்குவதற்காக வந்ததால் போலீசார் சோழவரம் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்தி சோதனை செய்ததில் அதில், மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரசு மதுபானக் கடையில் உள்ளூர் பிரமுகர்களுக்கு மட்டுமே மது வினியோகம் செய்யப்படும் என்றும், சென்னை புறநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மது வினியோகம் கிடையாது என்றும், மீறி மதுபானம் வாங்க வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்து கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல்துறை எச்சரித்தும் இருந்ததால் இன்று குறைந்த அளவிலேயே வாகனங்கள் வந்தன. மதுபானக் கடைகளிலும் அதிக அளவில் கூட்ட நெரிசல் இன்றி மதுபிரியர்கள் முக கவசம் அணிந்து குடை பிடித்தபடி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.