ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கே.எஸ்.அழகிரி… அங்கும் கூட அரசு மீது குற்றச்சாட்டு…

18 May 2020, 10:48 pm
Quick Share

விழுப்புரம்: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை அரசு எடுத்தால் விவசாயிகளின் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் தடை செய்ய முடியும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு மாலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில அரசு, இரு குடும்பத்திற்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட முன்விரோத பிரச்சினைகளை காவல்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது.

மத்திய அரசு, மின்சாரத்தை இலவசமாக தர முடியாது என்று கூறுகிறது. மாநில அரசு உடனடியாக இலவச மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று மிக கடுமையான முடிவை எடுத்திருக்கிறது. இந்தியாவின் வறுமை மறைந்ததற்கு 2 காரணங்கள் உண்டு. ஒரு காலத்தில் அமெரிக்காவில் இருந்து கோதுமை வந்தால்தான் பசி பட்டினி, பஞ்சம் தீரும். பட்டினி சாவுகள் குறையும் என்ற நிலை இருந்தது. இந்திராகாந்தி அவர்கள், பசுமை திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் தன்னிறைவு அடைந்தோம். அதன் பிறகு இந்தியாவின் விவசாய வளர்ச்சியை மேம்படுத்தினார்கள்.

நெல், கோதுமையில் மேம்பாடு அடைந்தோம். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இலவச மின்சாரம் வழங்கினார்கள். இந்த மின்சாரத்தை கொடுத்ததால் தான் இந்தியாவில் விவசாய விளைபொருட்கள் அதிகமாக உற்பத்தி ஆயின. இலவச மின்சாரம் கிடைக்கவில்லை என்றால் நெல், கோதுமை உற்பத்தி குறைந்து போயிருக்கும். எனவே விவசாயிகளுக்கு கொடுக்கின்ற மின்சாரம் இலவசம் என்ற வார்த்தையில் வராது.

எப்படி பாலம், சாலைகள் கட்டுமானம் கட்டுகிறோம், அதுபோல இதுவும் ஒரு கட்டுமானம் தான். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க அரசு கொடுக்கிற ஒரு சேவை. ஆகவே மத்திய அரசு, லாப நஷ்ட கணக்கு போட்டு அதை இலவசம் எனக்கருதி தடை செய்தால் விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்து போகும். உணவு தானிய உற்பத்தி குறைந்து போகும்.

மீண்டும் சோவியத் அமெரிக்க நாடுகளை நாடவேண்டி வரும். எனவே மோடி அரசும், தமிழக அரசும் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இலவச மின்சாரத்தை ரத்து செய்வது என்ற முடிவை எடுத்தால் தமிழகத்தில் இருக்கிற விவசாயிகளின் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் தடை செய்ய முடியும். வேறு அதிகாரத்தால் முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.