அடுத்த தேர்தலில் ஓ.பி.எஸ். மகன் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுகிறேன் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சவால்..!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 8:37 pm
Quick Share

தேனி : ஓ. பன்னீர்செல்வம் முன்பு நடத்தியது தர்மயுத்தம் என்றும், தற்போது நடத்துவது துரோக யுத்தம் என்று தேனியில் நடந்த கண்டன ஆர்பி உதயகுமார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சூளுரைத்தார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சியில் பெட்ரோல், சமையல் எரிவாய், மின்சாரம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு என பல்வேறு விஷயங்களை முன் வைத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் ஆன தேனி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டிகே ஜக்கையன் தலைமையில் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது :- தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் எப்படி நடக்கும்..? என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். முன்னொரு காலத்தில் அம்மாவால் ஓ. பன்னீர்செல்வம் ஒதுக்கப்பட்ட நேரத்தில், அம்மாவால் என் தலைமையில் தேனியில் இரண்டு கூட்டங்கள் ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் நான் நடத்தியிருக்கிறேன். தற்போதும் இந்தக் கூட்டத்தை பல தடைகளை மீறி காவல்துறையினரின் தடங்கல் மீறி, இந்த கூட்டத்திற்கு வந்து நமது கடமையை இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளோம். இவ்வளவு தடங்களை ஏற்படுத்திய காவல்துறையினருக்கு கண்டனத்தை தெரிவிக்க தானே வேண்டும்.

அனேகமாக, உளவுத்துறை மூலம் இந்த கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்கள் இந்நேரம் ஓ பன்னீர்செல்வத்திற்கு சென்று இருக்கும். இனிமேல் ஓ. பன்னீர் செல்வத்திற்கு தேனி வீட்டை காலி செய்தாலும் செய்திருப்பார். இனிமேல் அவருக்கு தேனியிலும் வேலை இல்லை. அதிமுக கட்சியிலும் வேலை இல்லை. தமிழகத்திலும் வேலை இல்லை. வணிகமாக எங்கு போவாரோ..? வாங்கி வைத்திருக்கும் மாலத்தீவுக்கு போனாலும் போவார். எங்க போனாலும் பரவால்ல, தமிழ்நாட்டு மக்களை விட்டு வைத்தால் போதும்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து தான் அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 99% பொதுக்குழுவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இருக்கும் நிலையில், கோர்ட்டுக்கு ஓ. பன்னீர்செல்வம் சென்று முறையிட்டதில் கூட பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கி மாபெரும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களை நீக்கி விட்டோம் என ஒவ்வொருவராக நீக்கியதாக ஆக்கி விடுகிறார்கள். நாங்களும் இதற்கு முன்னாடி முதல் லிஸ்டில் இருக்கிறோம். இன்னும் சில காலத்தில் ஒரு கோடியே 99 லட்சம் தொண்டர்களை நீக்கி விட்டோம். ஓ பன்னீர்செல்வம் அவரிடம் இருக்கும் மூன்று நபர்கள் மட்டுமே கட்சியில் தொடர்வோம் என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்.

முன்னாடி ஓ பன்னீர்செல்வம் செய்தது தர்மயுத்தம். ஆனால் தற்போது செய்வதோ துரோக யுத்தம். ஓ ரவீந்திரநாத் தேனி பாராளுமன்றம் உறுப்பினராக, அதுவும் அதிமுகவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரையும் நீக்கி துரோகம் செய்ததாக கூறினார். நான் கேட்கிறேன், ஓ ரவீந்திரநாத் எப்படி வெற்றி பெற்றார். எங்களைப் போன்று உங்களால் துரோகம் செய்யப்பட்ட அடிபட்ட தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றார்.

நான் சவால் விடுகிறேன். தேனி நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் அவரை நிறுத்திக் கொள்ளுங்கள். அவர் வெற்றி பெற்று விட்டால், நான் பொது வாழ்க்கையில் இருந்து வெளியேறி விடுகிறேன், என சவால் விடுத்தார்.

இதுபோன்று தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிரான சூளுரைகளை தொடர்ந்து தமிழக அரசின் ஓராண்டுகால பெட்ரோல், சமையல் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்சார விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை முன்னுறுத்தி கட்டண ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந்த கூட்டம் திமுகவின் ஓராண்டு கால மக்கள் விரோத ஆட்சிக்கான கண்டன கூட்டமா…? அல்லது ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான கூட்டமா என்ற குழப்பத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஆர் பி உதயகுமாரின் பேச்சை கண்டு ரசித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளான தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முற்கோடை ராமர் மாநில விவசாய அணி இணை செயலாளர் சேது உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

மேலும் தேனி மாவட்டத்திலிருந்து நான்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 3000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில், தேனி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் நான்கு துணை கண்காணிப்பாளர்கள் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Views: - 588

0

0