பெண்கள் அரசியலில் இருந்தால் வழக்குகளை எதிர்கொள்வதெல்லாம் சாதாரணம் : மீண்டு வருவதுதான் அழகு.. சசிகலா பேச்சு..!!

Author: Babu Lakshmanan
4 July 2022, 4:45 pm
Quick Share

pபெண்கள் அரசியலில் இருந்தால இது போன்ற வழக்குகள் எல்லாம் வரும் என்றும், இதை எதிர்கொண்டு வருவது தான் அரசியலுக்கு அழகு என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறிக் கொண்டு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வி.கே. சசிகலா, தியாகராயா நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கிண்டி கத்திப்பாரா வழியாக போரூர் சாலை வழியா, திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்.

அவருக்கு திருத்தணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அரசு கொறடாவான பி.எம். நரசிம்மன் தலைமையில் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, அவர் பேசியதாவது:- தமிழகம் தலை நிமிரவும், திமுக தலைமையிலான அரசின் அராஜக செயல்களை தடுத்து நிறுத்தவும், பெண்களின் பாதுக்காப்பை உறுதி செய்திட வலியுறுத்தி தனது பயணத்தை தொடர்கிறேன். மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு எனக்கூறி அறிவிக்கப்படாத மின்வெட்டு தற்போது உள்ளது.

சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதாக சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளனர். திராவிட செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். இதைத்தான் திராவிட மாடல் என அழைக்கிறார்கள்.

விரைவில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள திமுக தயாராகுங்கள். உள்ளாட்சி இடை தேர்தலில் தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கம். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..? விரைவில் ஒரு நல்ல முடிவு வரும். கழகத்தினர் ஒற்றுமையாக செயல்பட்டால் கழகம் முன்புபோல் வலிமை பெறும்.

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமையாக இருக்க வேண்டும். அது தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாக இருக்க வேண்டும். பணபலம், படைபலம் தலைமை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும் தொண்டர்கள் பலமும்தான் தலைமையை தீர்மானிக்கும்.

பெண்கள் அரசியலில் இருந்தால் இது போன்ற வழக்குகள் எல்லாம் வரும். அம்மா பார்க்காத வழக்கா..? இதை எதிர்கொண்டு வருவது தான் அரசியலுக்கு அழகு நிச்சயம். இதனை எதிர் கொண்டு நான் வருவேன்.

தமிழகம் ரவுடிகளின் கூடாரமாகிவிட்டது. தங்கத்தின் விலை ஏறி விட்டதால்தான் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. லாட்டரி சீட்டு விற்பனை, போதைப்பொருட்கள் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது .

அதிமுக தலைமைக் கழகத்திற்கு நிச்சயம் சூழல் ஏற்படும்போது செல்வேன். பொதுக்குழு நடைபெறுவது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும். அம்மா உணவகம் முறையாக
செயல்படுத்தாமல் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்கிறார்கள், என்று அவர்
தெரிவித்தார்.

Views: - 531

0

0