பக்காவா ஸ்கெட்ச் போட்டு யூஏஇ-ஐ தூக்கிய பிசிசிஐ : செப்டம்பரில் ஐபிஎல் பார்ட்-2 கன்ஃபார்ம்..!!

29 May 2021, 4:46 pm
Quick Share

மும்பை : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்., 9ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள், பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வந்தது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில், டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என முடிவு செய்த பிசிசிஐ, எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் ஐக்கிய அரபு அமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒருமாத காலத்திற்குள் போட்டிகளை நடத்தவும் முடிவு செய்திருந்தது.

இதனிடையே, ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்., டெஸ்ட் தொடர்களை முடிக்கும் இந்திய அணி, நேராக ஐக்கிய அரபு எமிரேட்சிக்கு செல்லும் என தெரிகிறது.

Views: - 442

0

0