‘சென்னைக்காரன் கோபப்பட்டு பாத்ததில்லையே’ : ஜடேஜா, தாகூர் அபாரம் : 4வது முறையாக சென்னை அணி சாம்பியன்

Author: Udhayakumar Raman
15 October 2021, 11:53 pm
Quick Share

ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றுள்ளது.

14வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி இன்றிரவு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது.முதல் 6 ஓவர்களில் பவர்பிளேயின் முடிவில் சென்னை அணி 50 ரன்களை எடுத்தது. சென்னை அணி 6வது முறையாக பவர்பிளேயில் 50 ரன்கள் எடுத்தது. மேலும் சென்னை அணி பவர்பிளேயில் 50 ரன்கள் அடித்த அனைத்து மேட்ச்களிலும் அந்த அணி வெற்றி பெற்று வந்திருக்கிறது சென்னை அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.8 ஓவர்களில் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் 9வது ஓவரின் முதல் பந்திலேயே சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதிரடியாக ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட், சுனில் நரைன் பந்துவீச்சில் 23 பந்துகளில் 27 ரன்களுக்கு சிவம் மவியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ருதுராஜை தொடர்ந்து ராபின் உத்தப்பா டுப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடுத்தடுத்து சிக்ஸர்களை தூக்கி சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் அதிரடி பாணிக்கு மாறிய டு ப்ளஸி அபாரமாக அரை சதம் கண்டார். இவர் சிக்ஸ் அடித்து மிரட்டலாக அரை சதத்தை கடந்தார். ராபின் உத்தப்பாவும் சளைத்தவர் அல்ல, அவரும் தன் பங்குக்கு சிக்ஸராக நொறுக்கினார். அதிரடி காட்டி ரசிகர்களை குஷியில் ஆழ்த்திய உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்களில் சுனில் நரைன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்தார். எல்.பி.டபிள்யூவை எதிர்த்து ரிவ்யூ கேட்ட போதும் அவர் அவுட் ஆனது உறுதியானது.உத்தப்பாவுக்கு பின்னர் மொயின் அலி, டு ப்ளஸியுடன் ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் மிகவும் மந்தமாக ஆட்டத்தை தொடங்கிய மொயின் அலி பின்னர் அவரும் அதிரடி பாணிக்கு மாறி சிக்ஸர், பவுண்டரியாக நொறுக்கினார். இருவரின் அதிரடியும் கடைசி பந்து வரை தொடர்ந்தது.ப்ளஸி கடைசி பந்தில் கேட்ச்சாகி அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது.

இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது. கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா(0), சுனில் நரேன்(2), இயன் மார்கன்(4), தினேஷ் கார்த்திக்(9) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Views: - 622

0

0