ஒருபுறம் பும்ரா… மறுபுறம் அஸ்வின்… சிக்கி சிதைந்து போன இங்கிலாந்து ; 2வது டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி…!!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 2:44 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 396 ரன்களும், இங்கிலாந்து அணி 253 ரன்களும் சேர்த்தன. 143 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி சுப்மன் கில்லின் சதத்ததால் 255 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இலக்கை நோக்கிய ஆடிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன் எடுத்திருந்தது. டக்கெட்டின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

தொடர்ந்து, 4வது நாள் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தாலும், மறுபுறம் ரன் குவிப்பிலும் ஆர்வம் காட்டினர். இதனால், ஆட்டம் பரபரப்பாகவே இருந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி, 292 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக க்ரலி 73 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், முகேஷ்குமார், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்திய அணி.

Views: - 793

0

0