கடைசி ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி..! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்தியா…

Author: kavin kumar
11 February 2022, 10:06 pm
Quick Share

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னும், ரிஷப் பண்ட் 56 ரன்னும் எடுத்தனர். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஜோடி 53 ரன் சேர்த்தது.வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும் அல்ஜாரி ஜோசப், வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 266 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

முகமது சிராஜ் ஷேய் ஹோப்பை 5 ரன்னில் வீழ்த்த, அதன்பின்னர் பிரண்டன் கிங் மற்றும் ப்ரூக்ஸ் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் தீபக் சாஹர். டேரன் பிராவோவை 19 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, ஹோல்டர்(6), ஃபேபியன் ஆலன்(0) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் நிகோலஸ் பூரன் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்களான ஒடீன் ஸ்மித்(36), அல்ஸாரி ஜோசஃப்(29), ஹைடன் வால்ஷ்(13) சிறு சிறு பங்களிப்பு செய்தனர். ஆனாலும் அவர்கள் யாரையும் களத்தில் நிலைக்கவிடாமல் இந்திய பவுலர்கள் வீழ்த்தியதால், 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதையடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

Views: - 1199

0

0