ரோகித் ஷர்மாவை கேப்டனில் இருந்து தூக்கியதே இதுக்காகத் தான் ; மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்த திடீர் விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 2:14 pm
Quick Share

ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது.

அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் அணியை இரண்டு ஆண்டுகளில் ஒரு சாம்பியன் பட்டம், ஒரு ரன்னர் பட்டம் வென்று கேப்டனாக செய்யப்பட்டு பாண்டியா வென்று கொடுத்திருந்த நிலையில், மீண்டும் மும்பைக்கு சென்றது விமர்சனத்துக்குள்ளானது.

ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மறுபக்கம், ரோகித் ஷர்மாவுக்கு பதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் சரியான நபர் என நினைத்து மீண்டும் அவரை ட்ரேடிங் மூலம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இது ரோகித் ஷர்மாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருவதுடன், அந்த அணியின் ஜெர்சி மற்றும் தொப்பியை எரித்தும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், மும்பை அணியின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளப்பக்கங்களை அன் ஃபாலோ செய்தும் வருகின்றனர்.

ரசிகர்களின் மனநிலையை அறிந்த மும்பை அணி நிர்வாகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அந்த அணியின் உலக செயற்பாட்டாளரின் தலைவர் மஹிளா ஜெயவர்த்தனே கூறியதாவது :- மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டமைப்பதற்கான ஒரு பகுதி தான் இது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எங்கள் அணியின் தத்துவமான வருங்காலத்தை தயார் செய்வதன் அம்சமாகும்.

சச்சின், ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங் தொடங்கி ரோஹித் ஷர்மா வரை அதிக வெற்றிகளை அணிக்காக பெற்றுக் கொடுத்ததுடன் வருங்காலத்தை பலப்படுத்திய பெருமையும் அவர்களுக்கு உண்டு. அதனை கருத்தில் கொண்டு தான் தற்போது 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பாக இத்தனை ஆண்டு காலம் அணியை வழிநடத்தியதற்கு ரோஹித் ஷர்மாவின் தலைமைக்கு எங்களின் நன்றியை கூறிக் கொள்கிறோம். எங்களுக்காக இணையற்ற வெற்றிகளை பெற்று தந்ததுடன் ஐபிஎல் வரலாற்றிலும் சிறந்த கேப்டனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார், எனக் கூறினார்.

Views: - 573

0

0