முதல் 53 பந்துகளில் ரன்னே இல்ல… பிறகு உண்மை முகத்தை காட்டிய இளம் வீரர்… ரஞ்சி போட்டியில் நடந்த சுவராஸ்யம்..!!

Author: Babu Lakshmanan
17 June 2022, 6:02 pm
Quick Share

இந்தியாவின் உள்கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் மும்பை – உத்தரபிரதேச அணிகள் விளையாடி வருகின்றன.

பெங்களூரூவில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 393 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் தம்ரோர் 115 ரன்களும், ஜெய்ஸ்வால் 100 ரன்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, விளையாடிய உத்தரபிரதேச அணி 180 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, இமாலய ரன்களுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணிக்காக களமிறங்கிய ஜெய்ஸ்வால், தான் சந்தித்த 53 பந்துகளில் ரன்களே எடுக்காமல் இருந்தார்.

பின்னர், 54 பந்தில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கியதுடன், செஞ்சூரி அடித்தது போன்று பேட்டை உயர்த்தி காண்பித்தார். இதனால், மைதானம் முழுவதும் கைதட்டல் பறந்தது. குறிப்பாக, மும்பை அணியினரின் டக் அவுட்டில் கைதட்டி அமர்க்களப்படுத்தினர்.

பின்னர், தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் 2வது இன்னிங்சிலும் சதமடித்தார். அவர் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், மும்பை அணிக்காக இரு இன்னிங்சில் சதமடித்த 4வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக, ரோகித் ஷர்மா, ரகானே மற்றும் வாசிம் ஜாபரை ஆகியோர் இந்த சாதனை செய்துள்ளனர்.

தற்போது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் எடுத்துள்ள நிலையில், 662 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Views: - 1828

0

0