பரபரப்பான இங்., – பாகிஸ்தான் ஆட்டம்.. கடைசி கட்டத்தில் கைமாறிய வெற்றி… ராவல்பிண்டி டெஸ்டில் நடந்த லீச்சின் மேஜிக்..!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 6:27 pm
Quick Share

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் பேட்டிங், வரலாற்று சாதனை படைக்கும் வகையில் இருந்தது.

முதல் நாளிலேயே க்ரவுலி (122), டக்கெட் (107), போப் (108), ப்ரூக்ஸ் (153) ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதனால், அந்த அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, 2வது நாளில் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள், இமாம் உல் அக், அப்துல்லா சஃபிக் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 187 ரன்களை சேர்த்திருந்தது.

3வது நாளில் அப்துல்லா சஃபிக் (114), இமாம் உல் அக் (121) சதமடித்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, அசார் அலி (27), சவுத் ஷகில் (37) ஆட்டமிழந்தாலும், நிதானமாக ஆடி கேப்டன் பாபர் ஆசம் (136) சதமடித்து ஆட்டமிழந்தார்.

ரிஸ்வான் (29), நஷீம் (15) என ஆகியோர் விக்கெட்டை இழந்த நிலையில், 3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 4வது நாள் ஆட்டம் தொடங்கியதும், பாகிஸ்தான் அணி 579 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து, 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இன்னும் ஒரு தினம் எஞ்சியிருக்கும் வேளையில், 4வது நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் துணிந்து டிக்ளேர் செய்தது பலனளிக்குமா..? என்று இங்கிலாந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், கடைசி நாளில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இங்கிலாந்து பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை கைப்பற்றினர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு இளம் வீரர் நசீம் ஷா, முகமது அலி ஆகியோர் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இங்கிலாந்து அணியின் விக்கெட்டை எடுக்க போராடினர். 5வது நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள ஒரு சில ஓவர்களே இருந்த நிலையில், அடிக்கடி நடுவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், பரபரப்பான கட்டத்தில் லீச் கடைசி விக்கெட்டை எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மெக்குலமும், கேப்டனாக ஸ்டோக்ஸும் பொறுப்பேற்று விளையாடிய கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Views: - 537

3

1