கபில் தேவ், ரவி சாஸ்திரிக்குப் பின் இந்த சாதனையைப் படைத்த முதல் ஆள் ரிஷப் பண்ட்!

5 March 2021, 9:42 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் கேப்டன் கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் சாதனைப்பட்டியலில் இணைந்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்திய இளம் வீரரான ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 101 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இவரது சதத்திற்கு முன்பாக இந்திய அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது.

பாராட்டு
இவரின் சதம் இந்திய அணியை மீட்கும் விதமாக அமைந்தது. இதையடுத்து இவரை இந்திய கிரிக்கெட் போர்டு தலைவரான சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் இந்த சதத்தின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் கேப்டன் கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் சாதனைப்பட்டியலில் இணைந்தார்.

மூன்றாவது வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆறாவது அல்லது அதற்குக் கீழ் களமிறங்கி ஒன்றுக்கு மேற்பட்ட சதம் விளாசிய மூன்றாவது வீரரானார் பண்ட். இதற்கு முன் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ரவி சாஸ்திரி ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

இதேபோல இந்தாண்டு (2021) நடந்த டெஸ்ட் போட்டிகளில் 500 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியரானார் ரிஷப் பண்ட். சர்வதேச அளவில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு பிறகு 500 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரரானார் ரிஷப் பண்ட். மேலும் கடந்த 2018 இல் பண்ட் அறிமுகமான பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக 500 ரன்களைக் கடந்து அசத்தினார் பண்ட்.

Views: - 1

0

0