தடுமாறிய தென்னாப்பிரிக்கா… தலைநிமிரச் செய்த பவுமா – வான்டர் டூசன் : இந்தியாவுக்கு கடின இலக்கு நிர்ணயம்..!!!
Author: Babu Lakshmanan19 January 2022, 6:51 pm
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 296 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியதையடுத்து கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். இதில், டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு தொடக்க வீரர்கள் மலன், டீகாக் மற்றும் மார்க்கம் ஏமாற்றம் அளித்த நிலையில், கேப்டன் பவுமா, வான்டர் டூசன் இணை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் சதம் விளாசினார். பவுமா 110 ரன்களில் ஆட்டமிழந்த நிலையிலும், வான்டர் டூசன் அதிரடி காட்டியதால், தென்னாப்ரிக்கா அணி 50 ஓவர்களில்4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்த்தது. டூசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 129 ரன்களை சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
0
0